Monday, 14 January 2013

மாலை மழை!!


மாலை இளங்காற்றினிலே...
சாலை செல்லும் பாதையிலே..
வாசம் தந்த சோலையிலே..
மலர்ந்தும் மலராத பூச்செடிகளிடை...
ஊஞ்சல் ஆடிடும் வெண்ணிலவே!!

சிற்றோடை சலசலக்க..,
பூங்காற்று மெய்சிலிர்க்க..,
சின்ன குயில்கள் கீதமிசைக்க..,
வண்ண மயில்கள் பரதம் கற்க,
பூரிப்பில் ஆழ்ந்திருக்கும் தேயாத வெண்ணிலவே!!

மஞ்சள் போர்த்த விண்ணினிலே;
துகில் போன்ற முகிலினிலெ;
சேர்த்து சேர்த்து வைத்த செல்வம்..,
உன்னைக் காண பூமியிலே..!

செல்வம் கண்ட பெண்ணிலவே..,
துள்ளியது என் கண்ணினிலே..,
மண் தொட்ட மழை சொர்க்கம்..,
உன்மனதில் ஏற்பட்ட பரவசம்..
ஆஹா..! இது ஒரு புதுரசம்!!

Sunday, 2 September 2012

நட்பு என்பது யாதெனில்...


நட்பு என்பது யாதெனில்...
தெளிவுடன் இதனை எழுதிட துடித்தேன்..
நித்தமும் நட்பின் நிழலில் நிலைத்திட்ட பிறகு
அதன் ஆழம் அறியவே முற்படும் மனது..

எதனுடன் ஒப்புமை செய்குவேன் நட்பை..??

பல நேர சிந்தனைகளுக்கிடையில்..
 ஐம்பூதங்களின் வல்லமை மனதில் வலமுற்றது...

ஆகாயமென விரிந்தது நட்பெனக்  கண்டேன்..
   பகலொன்றும் இரவொன்றும் வேடம் பூண்டதால் மறுத்தேன்;
மழைபோல் குளுமை தருவது நட்பென நினைத்தேன்..
  வெள்ளம் வந்தால் அழிவுண்டு மறுத்தேன்;
வாழ்வில் ஒளிதரும் தீபமென நினைத்தேன்..
  தீபத்தீ பிடித்தால் எரிக்குமே -வெறுத்தேன்;
நிலம்போல் வாழ்நாளெல்லாம் தாங்குமா பார்த்தேன்..
 நிலச்சரிவை அறிந்ததும் அதனையும் மறுத்தேன்;
இதம் தரும் தென்றல்தான் நட்பென நினைத்தேன்..
  புயலொன்றைக் கண்டதும் சச்சரவின்றி மறுத்தேன்;

ஐம்பூதங்களை மிஞ்சிதான் நட்பெனக்கண்டேன்!!
வேறெதுவெனச் சொல்லுவேன் நட்பினை..??

கடவுளெனச் சொல்வதா?? மாட்டேன்; ஆங்கே நாத்திகர்கள் உண்டு !!
எல்லோரும் நம்பும் இயற்கையெனச்   சொல்வதா?? இல்லை; அதற்கு அழிக்கும் குணமும் உண்டு !!
தூய உள்ளம்தான் அதனை தாயெனச் சொல்வதா?? ஐயகோ -இன்னமும் இங்கே அனாதைகள் உண்டு !!

ஒப்பில்லாவற்றுடன் ஒப்பிட்டும் சரிசமம் கிடைக்கவில்லை!
எண்ணங்களில் சிறைப்படவில்லை !!
வார்த்தைகளில் விழுந்திடவில்லை ..!!!
சற்றே கண்களை மூடினேன்; உணரத்தான் முடிகிறது..

எழுதுகிறேன் இப்படியாக
நட்பு என்பது யாதெனில் -
யாதொரு ஒப்புமை இல்லா உயிர் உணர்வு..

Monday, 16 July 2012

கருகும் கண்ணீர்....

கும்பகோண சந்தையிலே.. ஓடு கூரை வீட்டினிலே..
ராசாத்தி-கருப்பனுக்கு ஒத்தையா பொறந்த மவ..
நாலெழுத்து படிச்சதில்ல விவரமெதும் தெரிஞ்சுக்கல..
ஆத்தா அப்பன் சொன்னாங்கனு ..
பதினாலே வயசிலதான்.. மாடசாமி மாமனுக்கு பொஞ்சாதியா ஆனேனே...

பொழுதுக்கும் சண்ட..பொழுது போனா தண்ணின்னு,
உருபடாத புருஷன்தான்..
எட்டே மாசத்துல எட்டாத தூரம் போனான் ..

கையிலே தான் ஒத்த உசிரு,
சுகபட்டே வாழனும்னு ஊரெல்லாம் தேடி வெச்சேன்
'ஊர்வசி' னு பேரு..

கூலி வேலை:வீடு வேலை;கெடைச்ச வேலை செஞ்சுதான் நாலு காசு சேத்தேனே..
செல்லம் தந்தா ராணி மவ உருபடாம போகுமுன்னு
வேகம் காட்டி வளத்தேனே..
ரெண்டாவது படிக்கையிலே
கலெக்டர் தான் என் மவனு சொப்பனமும் கண்டேனே..

தாளிக்கும் நேரத்துல தீ பொறி பட்டதுன்னு துடிதுடிச்சு போன மவ 
அழுதுகிட்டே நின்னாலே.. மனசுக்குள்ள படபடத்தேன் ..
அவ படிப்ப நெனச்சு அத மறச்சேன்...
முட்ட கண்ணாலதான் இன்னும்  முழிச்சு முழிச்சு
விரட்டியும் விட்டேன் நான்

ரெண்டு மணி நேரம் தான் அவள அனுப்பி ஆகல..
என்  கனவாக பொறந்த மவ உருவத்தையும் காணல...
தீ பொறி பட்டதுன்னு துடி துடிச்சு அழுதவள,
தீக்குளமொன்னு வந்தே முழுங்கி போச்சுதுவே ...

பாவி மவனு என்னையும் தான் சபிச்சுகிட்டே போனாளோ...?
தீ பார்த்த நேரம் அவ எத நெனச்சு பாத்தாளோ..?
சொட்டு சொட்டா உசிர விட்ட கண்மணிதான் துடிச்சாளோ..?
பாவி நானும் இங்கிருக்க அவ தெய்வமாகி போனாளோ..?

போவலன்னு சொன்ன கண்ணை நா தானே அனுப்பி வெச்சேன்..
தீ கொண்டு போகுமுன்னு தெருஞ்சா நான் விரட்டி விட்டேன்..?

பிணந்தின்னி நெருப்புதான் உசுரோட உரசிடுச்சோ..?
சுடுகாட்டில் பிணமொன்னும் கெடையாம பசிதான் எடுத்துடுச்சோ..?
பூவென்னும் அறியாம மொட்டெல்லாம் கொளுத்திடுச்சோ..?
தப்பொன்னு நடந்துடுச்சு குத்தமென்னு யார சொல்ல..?
கண்ணகியா மாறி நானும் நெருப்பால எத சுட...?

கனவெல்லாம் காணாம எதோ-னு  விட்டிருந்தா, என் மகளாதான் வாழ்ந்திருப்பா...!
கனவெல்லாம் சேத்து வெச்சேன்.. அழகு உசிர விலைகொடுத்தேன்...

மகளா இருந்தவள நான் மண்ணாக்கி போட்டேனே...!!
இனி  வேறொன்னும்  இல்லை..

வாழ்நாளெல்லாம் என்  கண்ணீர் என்னை கருக்கிடுமே!!

Sunday, 29 April 2012

நான் நானாகிப் போகும் தருணங்கள்..

 தேடுகிறேன்..
       நான் நானாகிப் போகும் தருணங்களை..

உருக்கும் வெயிலிலே விசிரச் சொன்னார்..
கொட்டும் மழையினில் குடை விரிக்கச் சொன்னார்..
பனியினில் நடந்தால் காதினை மறைக்கச் சொன்னார்..

தீ சுடுமென்றார்; முட்கள் குத்துமென்றார்;
இதை நல்லதென்றார் அதை தீயதென்றார்..,

ஒரு வழி கண்டு அது நல்லதென என்னை நடக்கச் சொன்னார்...
இதனை பிடிக்காதென்பார்.. அதனை பிடிக்குமென்பார்..
எதிர்பார்க்கும் வண்ணம் நடவாமல் போனால்..
                           குற்றமென்றே கொற்றமடிப்பார்..

கடந்து வந்த பாதை தனை திரும்பி பார்த்தேன்..
சொல் பேச்சு கேட்கும் நல்ல பிள்ளையாய்..
சுற்றோரின் வாக்குக்கு ஒரு வாழ்க்கையாய் .. கடந்திட்ட பயணங்கள்..

தேடுகிறேன்... நான் நானாகி போகும் தருணங்களை..

எங்கேனும் தெரிகிறதா? எனக்கான புதுவொரு அனுபவங்கள்..

கடந்த வழி நடந்து பார்த்தேன் எனக்காய்..

தீயினை தொட்டேன் - சுட்டது;
முட்களை பிடித்தேன் - வலித்தது;
மழையினில் நனைந்தேன் - சிலிர்த்தது;
 வெயிலினை கடந்தேன் - வியர்த்தது;

நானாய் கண்டது; நானாய் கற்றது;
புதுவொரு அனுபவம் தந்தது..

வேலைக்கு மட்டுமா தேவை மன நிறைவு?
வாழ்கைக்கும் தேவை தேடலின் நிறைவு!!

விதி வழி நடந்தது போதும்...

இனியேனும் வாழ்கிறேன்..

  நான் நானாகிப் போகும் தருணங்களை... !!!!






Saturday, 28 April 2012

உயர்கனவு !!

இரு விழி துளிகளில்..
ஒரு இசை பயணம்...

பிச்சை பாத்திரம் கைகளிலே...
விரட்டும் பசியோ கண்களிலே..
உணவிட்டுப் போவார் நான் வாழ்ந்திடவே!!

உயிருடன் நடப்பதுவே வாழ்வெனில் உணவிட்டுப் போங்கள்!
சுய நினைவின்றி அசைவின்றி படுத்தோர் கணக்கில் நானும் என்றாக..
கனவின்றி வழியின்றி இருந்தும், சிகிச்சைக்காக..

நல்லறிவும் உள்ளமும் மன விரிவும் வாழ்வின் உயிரெனில்..
என் கனவிற்கும் வாழ்விற்கும் வழி சொல்லிப் போங்கள்!

பிறந்த வீதியில் நிமிர்ந்த கனவுடன்..
ஒளிரும் வாழ்வினை நோக்கி...
என் மூத்தோர் கேட்டறியாத கல்வியை..
நான் தேர்ந்தரிய கேட்கிறேன்..
         சிறு பிச்சை...

இரு விழி துளிகள் சிந்த இசைக்கும் வெற்றுப் பாத்திரம்!
வேண்டுவது உயிர் உணவல்ல.. உயர் கனவு - உயர்க்கல்வி!!

பாத்திரம் நிரம்ப அழகுற முடிவுறும் இசைப்பயணம்..
வெறுமையை நிரப்பும் முடிவும் உம் கையில்!!

இது ஒரு தனி மனித கனவல்ல!!
ஒரு சந்ததியின் வாழ்வியல் மாற்றத்தின் அடிப்படை!!!

Tuesday, 11 October 2011

ஜடாயு வாக்கு!!!

இடறி விழுந்த நிலையினில்
    கிழிந்திருந்த சிறகினை வருடினேன்..
பறந்திராத சிறகினினும்
     பறந்திருந்த நினைவுகள் சுகமே!!!

Sunday, 3 July 2011

விடை தேடும் கேள்விகள்!!

என் வாழ்க்கை கணக்கில்
நான் கடந்துவிட்டேன் சில பக்கங்கள்
சில பக்கங்கள் கோலாகலமாய்
சில பக்கங்கள் அலங்கோலமாய்!

கடைசி பக்கத்தின் முன் பக்கம் வரை
எல்லா பக்கத்தின் முன் பக்கமும்
பின் பக்கத்தை விட இன்பமாகவே உள்ளது;

பின் பக்கத்தினை நினைத்து முன் பக்கத்தை ஏற்பதா??
அதற்கும் முன் பக்கத்தினை நினைத்து
அப்பக்கதையும் வெறுப்பதா??

இன்றுவரை கடந்ததை சோகங்கலெனக் கொள்வதா??
அல்லது, இனிதான் பெருஞ்சோகமெனில்
இன்றுவரை அடைந்ததுதான் இன்பமெனக் கொள்வதா?
இன்பமே துன்பமெனக் கொள்ளத் தகுந்தேனெனில்
துன்பத்தை நரகமெனக் கொள்வேனா?
அவ்வாறெனில் நரகத்தை என்னென்று உரைப்பேன்??
இன்பமும் துன்பமும் கலந்தே தோன்றுமெனில்

இதுவரை தோன்றியிருக்கும் ஒருசில இன்பமும்
நான் துன்பமாய் கண்டதேனோ?
விதியின் விதிப்படி எல்லாமே துன்பமெனக்கொள்வது
                                       என் மனமோ??
எனில், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று கூறுவது பிழையோ?

விதிப்படி நடப்பதே உலகெனில்
மனம் விதியின் போக்கில் செல்லும் அடிமையோ?

மனம் சொல்வதே நாம் செய்வோமெனில்
விதி என்பதே மாயமோ?

விதி என்பதே மாயமெனில்
   மரணத்தின் கணக்குதான் என்ன??

மரணத்திற்கு மட்டும்தான் விதியெனில்
உலகில் வேற்றுமைகள் உருவாவதெப்படி?
வேற்றுமைக்கு காரணம் மனிதறேனில்
அவரின் உள்ளமும்தானே!!

மனசாட்சி எப்பொழுதும் சரியேயெனில்
அதை மீற வழி செய்வது விதிதானே!
பின், மரணத்தின் கணக்குமட்டும் விதி என்பதில்லையே!

என் உணர்வுகள் விதியினாலேயே வகுக்கப்பட்டதா?
என் உள்ளத்தில் இருந்துதான் எழுவதா?
அது விதிதானெனில் கள்வனை கள்வனாக்கியது விதியோ?
விதியின் பெயரால் பாவம் சேருமோ? அதில் அவனுக்கு பங்குமுண்டோ?
கள்வனாய் மாறுவது அவன் சித்தத்தாலெனில்
விதி என்பதுதான் என்ன??

என்னை சுற்றி மட்டுமே கேட்ட கேள்விகள்
பொதுவாய் பல கேள்விகளை எழுப்புகிறதே!
எந்தக் கேள்விக்கு விடையை தேட...??
விடையுள்ள கேள்விதான் எது?
எல்லா கேள்விகளுக்கும் விடையில்லையெனில்
கேள்விகள் மட்டும் எழுவது எவ்வாறு?
எல்லாக் கேள்விகளுக்கும் விடையுண்டெனில்
இக்கேள்விகளுக்கு விடை என்ன???