Tuesday, 11 October 2011

ஜடாயு வாக்கு!!!

இடறி விழுந்த நிலையினில்
    கிழிந்திருந்த சிறகினை வருடினேன்..
பறந்திராத சிறகினினும்
     பறந்திருந்த நினைவுகள் சுகமே!!!

Sunday, 3 July 2011

விடை தேடும் கேள்விகள்!!

என் வாழ்க்கை கணக்கில்
நான் கடந்துவிட்டேன் சில பக்கங்கள்
சில பக்கங்கள் கோலாகலமாய்
சில பக்கங்கள் அலங்கோலமாய்!

கடைசி பக்கத்தின் முன் பக்கம் வரை
எல்லா பக்கத்தின் முன் பக்கமும்
பின் பக்கத்தை விட இன்பமாகவே உள்ளது;

பின் பக்கத்தினை நினைத்து முன் பக்கத்தை ஏற்பதா??
அதற்கும் முன் பக்கத்தினை நினைத்து
அப்பக்கதையும் வெறுப்பதா??

இன்றுவரை கடந்ததை சோகங்கலெனக் கொள்வதா??
அல்லது, இனிதான் பெருஞ்சோகமெனில்
இன்றுவரை அடைந்ததுதான் இன்பமெனக் கொள்வதா?
இன்பமே துன்பமெனக் கொள்ளத் தகுந்தேனெனில்
துன்பத்தை நரகமெனக் கொள்வேனா?
அவ்வாறெனில் நரகத்தை என்னென்று உரைப்பேன்??
இன்பமும் துன்பமும் கலந்தே தோன்றுமெனில்

இதுவரை தோன்றியிருக்கும் ஒருசில இன்பமும்
நான் துன்பமாய் கண்டதேனோ?
விதியின் விதிப்படி எல்லாமே துன்பமெனக்கொள்வது
                                       என் மனமோ??
எனில், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று கூறுவது பிழையோ?

விதிப்படி நடப்பதே உலகெனில்
மனம் விதியின் போக்கில் செல்லும் அடிமையோ?

மனம் சொல்வதே நாம் செய்வோமெனில்
விதி என்பதே மாயமோ?

விதி என்பதே மாயமெனில்
   மரணத்தின் கணக்குதான் என்ன??

மரணத்திற்கு மட்டும்தான் விதியெனில்
உலகில் வேற்றுமைகள் உருவாவதெப்படி?
வேற்றுமைக்கு காரணம் மனிதறேனில்
அவரின் உள்ளமும்தானே!!

மனசாட்சி எப்பொழுதும் சரியேயெனில்
அதை மீற வழி செய்வது விதிதானே!
பின், மரணத்தின் கணக்குமட்டும் விதி என்பதில்லையே!

என் உணர்வுகள் விதியினாலேயே வகுக்கப்பட்டதா?
என் உள்ளத்தில் இருந்துதான் எழுவதா?
அது விதிதானெனில் கள்வனை கள்வனாக்கியது விதியோ?
விதியின் பெயரால் பாவம் சேருமோ? அதில் அவனுக்கு பங்குமுண்டோ?
கள்வனாய் மாறுவது அவன் சித்தத்தாலெனில்
விதி என்பதுதான் என்ன??

என்னை சுற்றி மட்டுமே கேட்ட கேள்விகள்
பொதுவாய் பல கேள்விகளை எழுப்புகிறதே!
எந்தக் கேள்விக்கு விடையை தேட...??
விடையுள்ள கேள்விதான் எது?
எல்லா கேள்விகளுக்கும் விடையில்லையெனில்
கேள்விகள் மட்டும் எழுவது எவ்வாறு?
எல்லாக் கேள்விகளுக்கும் விடையுண்டெனில்
இக்கேள்விகளுக்கு விடை என்ன??? 

Sunday, 26 June 2011

மண்ணுக்குள் வாழும் சரித்திரம்...

எத்தனை காட்சிகள் காண்கிறேன் ஒரு நாளிலே ..
எத்தனை கவலைகள் உணர்கிறேன் பலர் மனதிலே..
 உணர்வினில் உறைந்தது சிறு சலனம்
சிலர் வாழ்வினில் தான் எத்தனை அவலம்!!

போட்டிகள் நிறைந்ததா வாழ்க்கை??
போராட்டங்கள் நிறைந்ததா வாழ்க்கை??
சலிப்புகள் நிறைந்ததா வாழ்க்கை??
இல்லை சகிக்கதக்கதோ இந்த வாழ்க்கை??

இந்தியர் அனைவரும் உடன் பிறந்தோர்
என்னும் மொழியினை தினமும் உறுதிகூறி
என் உடன்பிறந்தோர் பலர் கண்ணில் நீர்மல்கி நிற்க
கைகட்டி கைவிரித்து அவரை கடந்தது என்னவோ??

காலத்தின் பாதைதனில் வழிதவறி போகின்றார்;
சகபயணியாம் என்னிடம் வழிகேட்டு நிற்க;
விழிபிதுங்கிய நிலையில்,
நான் சேரும் இடம் இன்னும் வரவில்லை என்றேனோ?
எங்கேதான் வழி நானும் அறியவில்லை என்றேனோ?
என்மொழிகேட்டு சலிப்புடன் சென்றாரோ
இல்லை என்னை கடிந்தேதான் கடந்தாரோ?

கதிரவனை காணாத விதையாய்
                   மண்ணுக்குள் நான்!!
என்னிடம் காயும் கனியும் வேண்டினால்
                    அளிப்பது எவ்வாறு??
அள்ளிகொடுக்க முடியாது போனாலும்,

தோழியரே!!
        உங்கள் கண்ணீரின் பாரத்தை என்மேல் பொழியுங்கள்
        அதை கண்டபின்னும் மொழியாமல்,
                    மண்ணுக்குள் மாண்டிட மாட்டேன்
         உன் துயர் துடைக்க துணிவு கொண்டே
       என் செவ்வானமாம் மண்வானத்தை முட்டிக்கொண்டு
                   நீலவானம் காண்பேன்!!

என் எழுச்சியில் எனக்கு மகிழ்ச்சி இல்லை!
உன்னை நிற்கவைப்பதில் என்மனம் நிறைந்திருப்பேன்..

இது மண்ணுக்குள் வாழும் புலம்பல் அல்ல!!
ஆங்கே
              புதைந்து கிடக்கும்
                      என் எதிர்கால சரித்திரம்!!!